20-20 உலகக்கிண்ண தொடரின் முதலிரு போட்டிகளையும் இலங்கை அணி தோற்றுள்ளமையினால் இரண்டாம் சுற்றை இழக்கும் அபாய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. இந்தக் குழுவில் இரு அணிகள் தெரிவாகவும் என்ற நிலையில் பலமான மூன்று அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது. இன்று(08.06) அமெரிக்க டெக்ஸ்சாஸில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்ளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 47 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 21 ஓட்டங்களையும், சரித் அசலங்க 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஸ்டபிசூர் ரஹ்மான், ரிஷாட் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரஸ்கின் அஹமட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் தௌஹித் ரிதோய் 40 ஓட்டங்களையும், லிட்டோன் டாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர். மஹமதுல்லா இறுதி நேரத்தில் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் துசார 4 விக்கெட்ளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
ஆரம்ப விக்கெட்ளையும், இறுதி நேர விக்கெட்களையும் இலங்கை அணி அடுத்தடுத்து கைப்பற்றிய போதும் துடுப்பாட்டத்தில் போதிய ஓட்டங்களை பெறாமையினால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது. பந்துவீச்சு மாற்றங்களும் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை அணி இனி நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளோடு மோதவுள்ளது. இந்த அணிகளோடு தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தோல்வியடைந்தாலே இலங்கை அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் நிலை உருவாகும்.