டி20 உலகக் கிண்ணத் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பார்படோஸில் நேற்று(08.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்ரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் 39 ஓட்டங்களையும், அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் 35 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கிரிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
202 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் ஜோஸ் பட்லர் 42 ஓட்டங்களையும், பில் சால்ட் 37ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், ஆடம் சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் அவுஸ்ரேலியா அணி 36 ஓட்டங்களுடன் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக அவஸ்ரேலியா அணியின் ஆடம் சம்பா தெரிவு செய்யப்பட்டார்.