2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் இன்று(09.06) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவுகள் ஜனாதிபதி ஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை ஏற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள் இன்று மாலை இராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இத்தலைவர்கள் வருகை தருகின்றமை, இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் கோட்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்படும் உயர் முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.