தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் விசா வழங்கல் செயல்முறை மற்றும் VFS குளோபல் நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பிலான பாராளுமன்ற விசாரணை காரணமாக தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொது நிதிக்கான குழுவின்(COPF) தலைவரான ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டபோது, தான் பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கருத்துக்களை வெளியிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தன்னுடைய உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என்றும், ஆகவே விசாரணை தேவையற்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.