சர்வதேச நட்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துவோம் – சஜித் உறுதி

யுத்தமொன்று முடிந்து சமாதானத்தை எட்டும் போது, நாட்டின் தலைவர்கள் சர்வதேச நட்கொடையாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும். என்றாலும் யுத்தம் நிறைவுற்று இதுவரை காலத்தில் சர்வதேச நன்கொடை மாநாட்டை கூட்டாத நாடாக இலங்கை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 227 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம் நல்லூர் புனித சார்ள்ஸ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 09 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன் போதே எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சிரமங்களை அம்மக்கள் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மே 2009 இல் இருந்து யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களைக் கடந்தாலும், யுத்த காலத்தில் அதிக அட்டூழியங்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களினதும் நலனுக்கான நன்கொடையாளர்கள் மாநாடுகளை கூட்ட முன்னைய, தற்போதைய ஆட்சியாளர்களால் முடியாதுபோயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களினதும், முழு நாட்டு மக்களினதும் நலனுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்குள் யுத்தத்தினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இந்தக் கடமையை நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தை புத்திஜீவிகளின் வாழிட பூமியாக மாற்றுவது அவசியமாகும். முழு நாட்டினதும் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் யாழ்.மாவட்ட கல்வியிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனம், மதம், கட்சி, சாதி, அந்தஸ்து பாராது, அது குறித்து சிந்திக்காது இலங்கையர் என்பதை முன்னிலைப்படுத்திக் கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் சமூகங்களுக்கு உரித்துடையோரை, பிற மதங்களையும் பிற இனங்களையும் சேர்ந்தவர்கள் என கருதுவதை விடுத்து, சகல பிள்ளைகளையும் ஒரு தாயின் பிள்ளைகளாகக் கருதி உண்மையைப் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பதைத் தெரிவிக்க தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவருக்கும் முதுகெலும்பில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி இதனை நடைமுறைப்படுத்தியதன் பிற்பாடு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பது போலவே மத, கலாச்சார, பொருளாதார, சமூக, கல்வி, சுகாதாரம் போன்ற உரிமைகளும் அடிப்படை உரிமைகளின் கீழ் உள்ளடக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நாடு பிளவுபடாது என நம்புகிறேன். வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு மற்றுமொரு சட்டமும், கிழக்கிற்கு ஒரு சட்டமும், மேல் மாகாணத்துக்கு இன்னுமொரு சட்டமும் என அல்லது சாதி, மத அடிப்படையில் சட்டங்கள் மாற்றப்படுவதற்கு இடமளியோம்.

ஒரே நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டமே அமுலில் இருக்க வேண்டும். தனித்தனியான சட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

1876 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 450 பிள்ளைகள் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும்,
இப்பாடசாலையில் 3 கணினிகள் மாத்திரமே உள்ளன.

இந்த நன்கொடைகள் இப்பாடசாலையின் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது வாக்குகளை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல.

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளையும் ஸ்மார்ட் கல்விக்குத் திருப்பி, உலகை வெல்லக்கூடிய ஸ்மார்ட் பிரஜையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version