டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அமெரிக்கா, புளோரிடாவில் இன்று(12.06) நடைபெறவிருந்தது. நாணய சுழற்சிக்கு முன்னரிருந்து தொடர் மழை பெய்து வந்தது. நீண்ட நேரமாக காத்திருந்தும் மழை குறையாததன் காரணமாக போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில் மூன்று போட்டிகளில் பங்கு பற்றி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இலங்கை அணி குழாம் Dயின் தரவரிசையில் இறுதி இடத்தில் உள்ளது.
D குழாமிலிருந்து முன்னதாகவே தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் இலங்கை அணிக்கு ஒரு போட்டி மாத்திரம் மீதமிருக்கின்ற காரணத்தினால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
குழாம் Dயின் தரவரிசையில் பங்களாதேஷ் 2 புள்ளிகளுடனும், நெதர்லாந்து 2 புள்ளிகளுடனும், நேபாளம் அணி ஒரு புள்ளியடனும் முறையே 2ம், 3ம், 4ம் இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளுக்கும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கின்றன.