மன்னாரில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுப்பு

அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று(12.06) பிற்பகல் 2.00 மணியளவில் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த போராட்ட பேரணி மன்னார் வலயக்கல்வி பணிமனை வரை சென்று, அங்கிருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக மன்னார் செய்தியாளர் தெரிவித்தார். 

1996ம் ஆண்டு முதல் காணப்படும் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்குமாறும்,வறிய மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கற்றல் உபகரணங்களை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும், பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் அற விடுவதை நிறுத்தக் கோரியும் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் “இலவச கல்வியை உறுதி செய், ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி மூன்றில் இரண்டு பங்கை கொடு, கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரி போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version