இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் இன்று(15.06) ஆரம்பமாகியது.
தொடரின் முதல் போட்டி ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அணித் தலைவி ஹெய்லி மேத்யூஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டபைன் டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சுகந்திகா குமாரி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
196 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 44 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 43 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும் மற்றும் அணித் தலைவி சமரி அத்தபத்து 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.