டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடரின் முதல் சுற்றில் இந்திய அணி பங்கேற்கவிருந்த இறுதிப் போட்டி அமெரிக்கா, புளோரிடாவில் இன்று(15.06) நடைபெறவிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சிக்கு முன்பிலிருந்து தொடரந்து பெய்த கடும் மழை காரணமாக போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர். இதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
அதற்கமைய குழாம் ‘A’யில் இடம்பெற்றுள்ள இந்தியா முதல் சுற்றின் முடிவில் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் தோல்வி அடையாமல் 7 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்திலுள்ளது. கனடா அணி பங்குபற்றிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியது.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குழாம் ‘A’யிலிருந்து இந்தியா, அமெரிக்கா அணிகளும், குழாம் ‘C’யிலிருந்து ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும், குழாம் ‘B’யிலிருந்து அவுஸ்ரேலியாவும், குழாம் ‘D’யிலிருந்து தென்னாப்பிரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இந்நிலையில், மேலும் 2 அணிகளுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு காணப்படுகின்றது.