தற்போது நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், புதிய வகை வரிகளை மக்கள் மீது விதிக்க சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தரப்பில் நின்று சிந்திக்காமல் மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை திணிக்கும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதே இதற்குக் காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMF பங்கேற்பில் நாட்டை கட்டியெழுப்புவது யதார்த்தமானதும் நடைமுறையானதுமான விடயம் ஒன்றாக அமைந்தாலும், முதுகெழும்பை நிமிர்த்திக் கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கும், மக்களை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தை எட்டுவது அரசின் பொறுப்பாகும். அரச வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனமையினாலயே புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன. மேலதிக வரிகளை விதிக்காமல் வரி அறவீட்டு வேலைத்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நட்பு வட்டார பெரும் செல்வந்தர்கள் பலம் வாய்ந்தவர்களின் தொடர்பில் மீளச் செலுத்த வேண்டியுள்ள கோடிக்கணக்கான பெருந்தொகை கடனை தள்ளுபடி செய்துள்ளனர். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் பல கோடி கடன்களை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை அண்மையில் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துமாறு நிதியமைச்சரிடம் கேட்ட போது, கடன் கொடுக்கல் வாங்கல்கள் இரகசியமானவை எனவும், பெயர்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 240 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(15.06) இடம்பெற்றது.
இதன்போது, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை நடனக் குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
உச்ச முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றி, அமுல்படுத்தி, கோடிக்கணக்கில் கடன் வாங்கிய தமது நெருங்கிய நட்பு வட்டார செல்வந்தர்களின் கடனை தள்ளுபடி செய்த பெரும் நிறுவனங்களினதும், தனி நபர்களினதும் பெயர்களை வெளியிடாமல், ஒட்டுமொத்த மக்களின் தோள்களில் எல்லையற்ற வரிச்சுமையை அரசு சுமத்தியுள்ளது. இது பாரிய அநீதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மீளச் செலுத்த வேண்டியுள்ள கோடிக்கணக்கான பெருந்தொகை கடனை மீளச் செலுத்தாது சலுகைகளை பெற்றுவரும் பெரும் செல்வந்தர்கள் உரியவாறு தமது கடன் தொகையை மீளச் செலுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக உச்சபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் எனவும், நட்பு வட்டார செல்வந்தர்களுக்கு எம்மிடம் பாதுகாப்பு கிடையாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வரிச்சுமை என்பது அரச வருமான பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, அரசின் இயலாமையே இது காட்டுகிறது. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முறையான வரி வருவாயைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்நபர்களும், நிறுவனங்களும் சரியான முறையில் வரி வலையில் உள்வாங்கப்பட வேண்டும். அந்த இயலாமையிலும் திறமையின்மையிலும் வரிச்சுமையை அதிகரிப்பது தீர்வாகாது. இது வெறுக்கத்தக்க செயல் எனவும், உரிய நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
முதலாளிகளின் அரசியல் அதிகார தொடர்புகளினால் சமூகத்தில் செல்வந்தர்களை உயர்வாக மதிக்கும் யுகமும், சாதாரண மக்களை தாழ்வாக நடத்தும் காலமும் முடிவுக்கு வந்து, அனைவரும் சமமாக நடத்தப்படும் யுகம் உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.