2024இன் 1ம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று(19.06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணாதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(18.06) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2010ம் ஆண்டின் 17ம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ், 2381/16ம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதியும் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, இன்று(19.06) காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து காலை 10.30 முதல் மாலை 5.00 வரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் 2366/33 மற்றும் 2369/42ம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்தி சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2381/24ம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பனவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மாலை 5.00 முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.