எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’ எனும் புதிய கூட்டணியொன்று இன்று(19.06) உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட தரப்பினர், சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும், மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர, மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே, ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர ஆகியோர் இந்த கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், சிவில் அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பு ஆகியனவும் இதன் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர் உள்ளனர்.
மக்கள் போராட்டத்தின் போது கோரப்பட்ட முறைமை மாற்றம் எதிர்பார்த்த வகையில் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய அபிவிருத்திகளின் கீழ் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வசந்த முதலிகே, மக்கள் தமது அன்றாட வாழ்வில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.