Online தொழில் புரியும் சகலருக்கும் EPF, ETF வழங்க கோரும் சஜித் 

இணையம் பிரபலமடைந்ததோடு, 2000-க்குப் பிறகு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பிரபலமடைந்துள்ளதுடன், இத்தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குதளங்கள் மூலம் வேலை மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இது வழிவகுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, பொருட்களின் வர்த்தகம் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் சேவைகளை வழங்குதல் ஆகியவை பிரபலமாகியுள்ளன. Gig பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இந்தத் துறையில் பெரியதொரு பணியாளர் படையே உள்ளது. வாடிக்கையாளர் வசதி மற்றும் விலை போட்டித்தன்மை மற்றும் சேவை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சேவைகளுக்கு பணியாளர்கள் முழு நேர, பகுதி நேர மற்றும் சுயாதீன ஒப்பந்ததாரர்களாகப் பணியமர்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, முக்கிய பணிக்கு மேலதிகமாக, இணைய முறையின் அடிப்படையில் வாடகை சேவைகள் மற்றும் கல்விச் சேவைகளை வழங்குவதன் மூலம் மேலதிக வருமானத்தை இதன் ஊடாக ஈட்டவும் முடிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோயால் வேலை இழந்த 18-30 வயதுடைய இளைஞர்கள் தங்கள் வழக்கமான வேலைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக இதை நோக்கித் திரும்பியுள்ளனர். இது நல்லதொரு போக்கு என்றாலும், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல் இங்கு இடம்பெறுகிறது. இதைத் தவிர்க்க அபிவிருத்தி கண்ட நாடுகள் தொழிலாளர் சட்டங்களில் கூட திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் இந்த தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் தாமதம் ஏற்படுவதால், அதிக இலாபம் ஈட்டுவதற்காக பகுதி நேர அல்லது சுயாதீன ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இங்கு ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிகிறது. இது நீண்ட கால அடிப்படையில் நாட்டை பாதிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற முறைசாரா துறைகளில் வேலை செய்பவர்கள் வாழ்க்கையின் நடுவில் பண பலம் இல்லாமல் திண்டாடுவார்கள். இதனால் வாடகை வாகன சாரதிகள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பான ஓய்வூதியம் அல்லது விசேட காப்புறுதித் தொகை அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சகல Uber சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உதாரணமாகக் கொண்டு, தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் நாடும் தமது தொழிலாளர் சட்டத்தை திருத்தியமைத்துள்ளது. இலங்கையிலும் இவ்வாறான நிறுவனங்கள் இருப்பதால், இந்நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் அனைவரும் ஊழியர் உரிமைகளுடன் பங்களிப்பு ஓய்வூதியத்தைப் வழங்க வேண்டும். இணைய தளங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு EPF, ETF நிதியங்கள் பங்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்காக விசேட அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20.06)  யோசனை முன்வைத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version