நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.