ஜேர்மனியில் நடைபெற்றுவரும் 2024 ஆண்டுக்கான ஐரோப்பா கிண்ண தொடரின் குழு A இற்கான போட்டிகள் நிறைவடைந்துள்ளன. போட்டிகளை நடாத்தும் ஜேர்மனி அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற சுவிற்சலாந்து அணியுடனான போட்டியை 1-1 என சமநிலையில் நிறைவு செய்துள்ளது. இதன் காரணமாக 7 புள்ளிகளோடு முதலிடத்தை பெற்றுக்கொண்டது. சுவிற்சலாந்து அணி ஒரு வெற்றி, இரண்டு சமநிலை முடிவுகளுடன் 5 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடததை பெற்றுக்கொண்டது. இந்த இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளன.
28 ஆவது நிமிடத்தில் சுவிற்சலாந்து அணி சார்பாக டோய் அடித்த கோல் மூலமாக முன்னிலை பெற்றது. வெற்றி உறுதி என்ற நிலையில் 92 ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணியின் பியூல்ரக் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்தது. 17 ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணி பனால்டி கோல் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.
மற்றுமொரு போட்டியில் ஹங்கேரி அணி 1-0 என ஸ்கொட்லாந்து அணியை வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஸ்கொட்லாந்து அணி சமநிலை முடிவுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. 6 குழுக்களில் நான்கு மூன்றாமிட அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் என்ற நிலையில் ஹங்கேரி அணிக்கான வாய்ப்பு இன்னமும் காணப்படுகின்றது. ஹங்கேரி அணி சார்பாக போட்டி நிறைவடையும் நேரத்தை தாண்டி வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் 10 ஆவது நிமிடத்தில்(90+10) சோபாத் கோல் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.