குற்றம் நிருபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – அமைச்சர் ஹரின்

2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (24.06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் பாரிய செலவீனத்தை மேற்கொள்ளும் நிலையில், சர்வதேச அளவில் சாதனை படைத்த 60 விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதாந்தம் தலா 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் தெரிவு செய்யப்பட்ட 850 விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாடசாலை ரக்பி வீரர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு காப்புறுதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

“சுதந்திர இலங்கையின் 75 வருட வரலாற்றில், மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமையை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையாக “உறுமய” காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தைச் சுட்டிக்காட்ட முடியும். பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உறுமய திட்டத்தின் மூலம் 20 இலட்சம் முழு உரிமையுள்ள காணி உறுதிகள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மக்களிடம் இது பற்றிய சரியான புரிதல் இல்லை என்று தெரிகிறது. அதனாலேயே இவர்களது மானியப் பத்திரங்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்து காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றும் செயற்பாடுகள் மந்தமான நிலையில் நடைபெறுகின்றன. இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நடமாடும் சேவையை இந்த வாரம் முதல் ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பேரூந்துகள் மூலம் பிரதேச செயலக மட்டத்தில் மக்களுக்கு அறிவித்து உறுமய காணி உறுதிப்பத்திரங்கள் விநியோகத்தை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வடமேல் மாகாணத்தில் 12,000 காணி உறுதிப்பத்திரங்களும், மாத்தறை மாவட்டத்தில் 12,000 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் பணிகள் அடுத்த சில தினங்களில் நிறைவடையும்.

சுற்றுலாத் துறையைப் பற்றி நாம் கூறினால், இந்த ஆண்டு 990,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வருகை தந்ள்ளனர். இலவச விசா வழங்கும் முறை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பிறகு இலவச விசா வழங்கும் முறையை அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சுற்றுலாத்துறையின் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இதுவரை 05 உலகளாவிய விளம்பரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு தனித்தனியான உலகளாவிய விளம்பர திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கையை பிரபலப்படுத்த . “Must Visit“ பெயரில் புதிய வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊக்குவிப்புத் திட்டங்களின் காரணமாக, உலகின் முதல் பத்து சுற்றுலாத் தலங்களுக்குள் இலங்கையையும் கொண்டு வர முடிந்துள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் மீண்டும் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அந்தச் சூழல் சுற்றுலாத் துறையின் ஒரு நல்ல போக்காகும். எனவே, கடல்சார் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் திருகோணமலை மற்றும் அறுகம்பே பகுதிகள் கடல்சார் சுற்றுலாத் துறையின் கேந்திர மையமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் விரைவில் உள்நாட்டு விமான சேவையொன்றை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய விளையாட்டு சட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையில் 73 விளையாட்டுகள் உள்ளன. புதிய கிரிக்கெட் சட்டம் அனைத்து விளையாட்டுகளுக்கும் செல்லுபடியாகும். கிரிக்கெட் விளையாட்டிற்கு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வீரர்களின் மன நிலையை பாதிக்கும் வகையில் சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வருடம் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யத் தயார். விளையாட்டை அரசியலில் இருந்து விடுவிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய விளையாட்டுச் சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கூட எந்த விளையாட்டு சங்கத்திலும் பதவி வகிக்க முடியாது.

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். எனவே, அந்த விடயத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்து நிதியைப் பெற்று, பகல் – இரவு போட்டிகளை நடத்தும் திறன் கொண்ட மற்றொரு மைதானத்தை நிர்மாணிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ணம் போன்ற போட்டிகளை ஒரே நாட்டில் நடத்துவதற்கு, பகல் – இரவுப் போட்டிகளை நடத்தக்கூடிய சர்வதேச அளவிலான 05 மைதானங்கள் அந்த நாட்டில் இருக்க வேண்டும்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, ஒரு குறிப்பிட்ட ஸ்திரநிலைக்கு கொண்டு வருவதன் மூலம் இவை அனைத்தும் செய்யப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான வேலைத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது. பொருளாதார ஸ்திரத்தன்மை உறுமய திட்டம், சுற்றுலாத் துறையின் ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டுத் துறையின் ஊக்குவிப்பு ஆகியவற்றில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும். மக்கள் தங்களின் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தினால் அடுத்த தசாப்தம் பிரஜைகளின் தசாப்தமாக மாறும் என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்று சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version