மீண்டுமொரு பொய்யை வெற்றியாக கொண்டாடும் முயற்சியில் அரசாங்கம்

இத்தருணத்தில், பட்டாசு கொளுத்தியும், மேளம் அடித்தும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் மகிழக்கூடிய கதையைச் சொல்லப் போகிறோம் என தெரிவித்து வருகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா-கோவிட் பேரழிவு மற்றும் இலங்கையின் நிதி வங்குரோத்து ஆகிய மூன்று துயரங்கள் நடந்தபோதிலும், சமீபத்திய காலங்களில் நல்ல செய்தி எதுவும் ஏற்படவில்லை. இதற்கு மத்தியில் சிலர் பட்டாசு கொளுத்த தயாராகி வருகின்றனர். 

வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதே இதற்கு காரணம் என குறிப்பிடுகின்றனர். அண்மைக்காலமாக நாட்டின் பெரும்பான்மையான மக்களை பொய்களால் ஏமாற்றி வரும் நிலையில் இந்நாடு பெரும் துயருக்கு ஆளாகியது. இதன் காரணமாகவே, ஒரு நாடாக நாம் இந்தப் பெரும் பேரிடரில் விழுந்திருக்கிறோம். இந்த பட்டாசு கொளுத்த முயலும் சந்தர்ப்பம் உண்மையில் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதாலா அல்லது வேறு காரணத்தினாலா என்பது குறித்த உண்மை நாட்டுக்குத் தெரிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டுக் கடன் சுமையிலும், வங்குரோத்து நிலையிலும் ஒரு நாடாக நாம் தவித்து வருகிறோம். பெற்ற வருமானத்தில் இருந்து கடனை அடைக்க முடியாமல், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையே வங்குரோத்து நிலை என்று அழைக்கிறோம். சமூகத்தில் சிறு பிள்ளை முதல் பெரியோர் வரை ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். இந்நேரத்தில் 220 இலட்சம் மக்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியாள் கடன் போன்ற வெளிநாட்டுக் கடன்களும் உள்நாட்டுக் கடன்களையும் கொண்ட நம் நாட்டில், 2023 தரவுகளின் பிரகாரம் 92 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் செலுத்தப்படாத வட்டியால் பின்னர் சேர்ந்த வட்டியோடு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் செலுத்த வேண்டியுள்ளோம். இவ்வாறான கடன் நிலைமை ஏற்பட்டுள்ள வேளையில், இருதரப்பு கடன்தாரர்களுடன் சில இணக்கப்பாடுகள் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது நாட்டின் கடன்களில் ஒரு பகுதி மட்டுமே. இன்னும் அதிகமான வெளிநாட்டு வர்த்தக கடன்களை செலுத்த வேண்டியுள்ளன. இது தொடர்பாக எந்த உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 259 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, ஹோமாகம, பாதுக்க, மாதுலுவாவ சோபித மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(25.06) இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஆரம்ப இறையாண்மை பிணைமுறி பத்திரதாரர்களைத் தொடாமல், உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியங்கள், ஓய்வூதியதாரர்களின் பணிக்கொடைகளில் வெட்டுக்களை செய்துள்ளனர். தற்போதும் இந்நாட்டு உழைக்கும் மக்களின் நலன்புரி நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சமூகத்தின் பெரும் செல்வந்தர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பட்டாசு கொளுத்துவதற்கு முன், மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பு நிதிப் பகுப்பாய்வில், நாட்டின் உழைக்கும் மக்களுக்கா அல்லது வெளிநாட்டுக் கடன் பத்திரதாரருக்கா அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும். நாட்டு மக்களுக்கு குறைந்த சுமை இருக்கும் பட்சத்தில் நிறைய பட்டாசுகளை கொளுத்தலாம். பட்டாசு கொளுத்துவதற்கு முன்னர் மக்களை ஏமாற்றாமல் நிதி தரவுகளை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்தார்.

முத்துயரங்கள் மூலம் நாட்டு மக்கள் பன்முக துன்பங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது. உயர் பணவீக்க விகிதத்தில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக வட்டி விகிதத்தால் தொழில்முனைவோர் மற்றும் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாட்டு மக்களின் தோள்களில் அதிக வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. EPF/ ETF நிதிகளைப் பிட் பாக்கெட் அடித்து, எவ்வாறு பட்டாசு கொளுத்தி கொண்டாட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் ஒருமுறை கடனை அடைக்கும் நிலைக்கு வந்தால் மட்டுமே எம்மால் மகிழ்ச்சியடைய முடியும். கடனை மீளச் செலுத்தும் போது, இலங்கை வங்குரோத்தா இல்லையா என்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் எம்மை அடையாளப்படுத்தும். இதனை பாராளுமன்றமோ, நிறைவேற்று அதிகாரமோ, நீதித்துறையோ தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்து நிலை இல்லையாயின், சர்வதேச நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் கடன் பெற முடியும். என்றாலும் நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை. கடன் செலுத்தும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இது எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், 220 இலட்சம் மக்களும் இந்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை புரிந்துகொள்ளாதவிடத்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தைச் சந்திப்போம். இல்லாத ஒன்றை உருவாக்கி, இருக்கும் ஒன்றை அழித்து, பாரிய அவலத்தை இவர்கள் உருவாக்குவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டு மக்களுக்கு சாதகமான நலவுகள் கிடைக்கும் உடன்பாட்டை எட்டினால் மட்டுமே பட்டாசு கொளுத்த வேண்டும். உழைக்கும் மக்களின் பணத்தை பிட் பாக்கெட் அடித்து பட்டாசு கொளுத்த முடியாது. மக்களைத் தவறாக வழிநடத்தி, தவறான செய்திகளைக் கூட சமூகமயமாக்க முயல்கிறார்கள். தரவுகள் மற்றும் காரண காரியங்களின் அடிப்படையில் அமைந்த உண்மைகளை மையமாகக் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும். இல்லையேல் ஆட்சியாளர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றமடையவே செய்வர் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version