இலங்கை சுரக்ஷா கப்பலுக்கு உதிரிப் பாகங்களை வழங்கிய இந்தியா 

இந்திய கரையோரக் காவல்படை கப்பலான சச்செட் இரு நாள் விஜயமாக கடந்த 19ம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இலங்கை கரையோரக் காவல்படை கப்பலான சுரக்ஷாவுக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப் பாகங்களை அன்பளிப்பாக வழங்குவதற்காக கரையோரக் காவல் படையின் குறித்த ரோந்துக் கப்பல் இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வருகையின் அங்கமாக இக்கப்பலின் கட்டளை அதிகாரி பிரதி அத்தியட்சகர் ஜெனரல் ஆர் ராஜேஷ் நம்பிராஜ் TM, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் TSK பெரேராவையும், இலங்கை கரையோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதானவையும் சந்தித்திருந்தார்.

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் இந்திய கரையோரக் காவல் படையின் இக்கப்பலால் இலங்கை கரையோரக் காவல்படை கப்பலான சுரக்ஷாவுக்கு தேவையான உதிரி பாகங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தன.  

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஶ்ரீ சந்தொஷ் ஜா , இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்  TSK பெரேரா இலங்கை கரையோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான மற்றும் இலங்கை கரையோரக் காவல் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இக்கப்பல் 2024 கடந்த 21ம் திகதி மீண்டும் புறப்பட்டது. இலங்கை கரையோரக் காவல் படையின் சுரக்ஷா 2017 ஒக்டோபரில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கரையோர ரோந்துக் கப்பலாகும்.  2021 ஜூனிலும் 2022 ஏப்ரலிலும் இக்கப்பலுக்கான உதிரிப்பாகங்கள் இந்தியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததுடன் 2024 ஜனவரியில் ஹலன் சிலின்டர்களை மீள் நிரப்புவதற்கும் உதவி வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பாரிய அளவிலான உதிரிப்பாகங்களை ஒப்படைப்பது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்தியம்புகின்றது. இவ்வருட முற்பகுதியில் இந்தியக் கரையோரக் காவல்படை கப்பல்களான சமரத் மற்றும் அபிநவ் ஆகியவை  2024 பெப்ரவரி 27ம் திகதி முதல் 2024 மார்ச் 05ம் திகதி வரை காலி மற்றும் கொழும்புக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர்  கோட்பாடு ( பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்) ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளினதும் கடற்படையினர் மற்றும் கரையோரக் காவல் படையினர் இடையிலான தோழமை மற்றும் இயங்குதிறனை வலுவாக்கும் இலக்குடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கரையோரக் காவல்படை கப்பல்கள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version