பொய்களை உண்மையென நம்ப வைத்து மக்களை ஏமாற்றும் முயற்சி 

இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றும் இவ்வேளை, கோயபல்ஸ் கோட்பாடு நாட்டில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்று சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிட்லரின் கோயபல்ஸ் ஆட்சியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை உண்மையாக்கினர். இத்தகைய கோட்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கசப்பான உண்மையை இந்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எமது நாடு 92 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கிறது. இந்த கடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை கொண்டுள்ளது. இந்த கடன் தொடர்பில் அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 262 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, பியகம, பமுனுவில மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு (26.06) நடைபெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே வந்தால், சர்வதேச மூலதனச் சந்தைகளில் கடன் பெறும் வாய்ப்பை பெறும். இது குறித்து குடிமக்கள் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

வரிச்சலுகை வழங்கி நாட்டை கட்டியெழுப்பலாம் என்று அன்று ஆட்சியாளர்கள் கூறினர். இதன் விளைவாக எமது நாடு பொருளாதார மரணப் பொறியில் சிக்கியது. நாட்டின் பொருளாதாரம் எல்லா வகையிலும் சீர்யின்மைக்கு இட்டுச் செல்லப்பட்டு வங்குரோத்தையடைந்தது. அந்தப் பொய்யை ஏற்றுக்கொண்டதால் நாடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. இன்றும் அந்தப் பொய்யை மீண்டும் சொல்ல அரசாங்கம் தயாராகியுள்ளது.

மக்களை ஏமாற்றி பொய்களால் முன்னோக்கி நகர்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. பொய்களால் இனியும் எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது. உண்மை மற்றும் காரண காரிய நிலையை அடிப்படையாகக் கொண்டு நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், எனக்கு நோய் இல்லை எனக் கூறிக் கொண்டு அதற்கு சிகிச்சை பெறாமல் இருந்தால், அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதே போல் இன்றும் எந்த பிரச்சினையும் இல்லை, எல்லாம் சரியாகி விட்டது, வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்று பொய் சொன்னால் நாடும் மரணத்தையே சந்திக்கும். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையிலயே அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இறையாண்மை பத்திரதாரர்களுடன் உடன்பாடு இல்லாமல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்று எவ்வாறு கூறுவது என்பதில் பிரச்சினை இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்களில் அரங்கேற்றப்பட்டு வரும் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், பாவனைகளையும், நிகழ்ச்சிகளையும் கண்டு ஏமாந்து விட வேண்டாம் என இந்நாட்டு மக்களை வேண்டிக்கொள்கிறேன். தகவல்களின் அடிப்படையில், ஆதாரங்களின் அடிப்படையில் எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சமூகத்தில்  இருக்கும் பெரும் செலவந்தர்களே இன்று தியாகங்களைச் செய்ய வேண்டும். உழைக்கும் மக்களால் இந்த தியாகங்களைச் செய்ய முடியாது. உழைக்கும் மக்களின் நலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு, நட்பு வட்டார முதலாளிகளுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ளது. இதையே இந்த அரசாங்கம் செய்துள்ளது.

நாட்டு மக்கள் துயரமான வாழ்க்கை முன்னெடுத்து வரும் போது, பிள்ளைகள் சிரமப்பட்டுக் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் போது, பாடசாலை கல்வித்துறை வளப்பற்றாக்குறையை சந்தித்து வரும் போது, இவற்றை நிவர்த்திக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசின் குறைந்தபட்ச கடமையும் பொறுப்பும் ஆகும். எமது நாட்டின் பிள்ளைகள் அதீத திறமைசாலிகளாக இருந்தாலும், ஒரு நாடு என்ற வகையில் நாம் தவறான பாதையில் சென்றால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் காலாகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனம், மதம், அந்தஸ்து தராதரம் மற்றும் அரசியல் அனுகூலங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளினால் தீர்மானிக்கப்படும் கொள்கைகள் இனிமேலும் நாட்டுக்குத் தேவையில்லை. இதனால் நாட்டுக்கு நன்மை ஏற்படுவதற்குப் பதிலாக, பெரும் சேதத்தையே விளைவிக்கும். எனவே கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version