இலங்கையின், 2024ம் ஆண்டிற்கான மேஜர் கிளப் டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு Nondescripts Cricket Club மற்றும் Bloomfield Cricket and Athletic Club அணிகள் தகுதி பெற்றுக்கொண்டன. இன்று(26.06) நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றியீட்டியதன் ஊடாக குறித்த அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்து கொண்டன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், Nondescripts Cricket Club மற்றும் Burgher Recreation Club அணிகள் பலப்பரீட்சை நடத்தயிருந்தன. மழைக் காரணமாக போட்டி 9 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற NCC அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Burgher அணி 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய தரவரிசையில் முன்னிலையிலிருந்த NCC அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில், Moors Sports Club மற்றும் Bloomfield Cricket and Athletic Club அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.மழைக் காரணமாக போட்டி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Bloomfield அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Moors அணி 8 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. Bloomfield அணி சார்பில் சாஹான் நாணயக்கார 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
71 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Bloomfield அணி 7.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. Bloomfield அணி சார்பில் லஹிரு மதுஷங்க 12 பந்துகளில் 26 ஓட்டங்களையும், அணித் தலைவர் நிபுன் கருணாநாயக்க 8 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதன்படி, Bloomfield அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.
NCC மற்றும் Bloomfield அணிகள் மோதும் இறுதிப்போட்டி எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.