உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா!!

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது. சுமார் 13 வருடங்களின் பின்னர் இந்தியா உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இறுதியாக தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. தற்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி  டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது. 

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற எந்தவொரு போட்டிகளிலும் தோல்விகளை பெறாத இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. மேற்கிந்திய தீவுகள், பர்படோஸில் இன்று(29.08) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.  

அதன்படி, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 5 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பின்னர் விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அக்சர் படேலின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் இந்திய அணி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.  

அக்சர் படேல் 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த சிவம் துபே அதிரடியாக துடுப்பெடுத்தாடி 27 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதிவரை நிதானமாக துடுப்பெடுத்தாடிய விராட் கோலி 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில், கேசவ் மஹாராஜ், அன்ரிச் நொக்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.  

177 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. டி கொக் உடன் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணிக்கா சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.  

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களுக்கும், டி கொக் 39 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக துடுப்பெடுத்தாடி போட்டியினை தென்னாப்பிரிக்கா அணிக்கு சார்பாக மாற்றினார். ஹென்ரிச் கிளாசென் 52 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். 

பின்னர் களத்திற்கு வந்த துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டிய 3 விக்கெட்டுக்களையும், அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொடுத்தனர். அதன்படி, இறுதிப் போட்டியில் 7 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இந்திய அணி, 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. 

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் விராட் கோலியும், தொடரின் ஆட்ட நாயகனாக வேகபந்து வீச்சாளரான பும்ராவும் தெரிவு செய்யப்பட்டனர்.

பலமுறை உலகக் கிண்ணத் தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற போதும், ஒரு தசாப்த காலமாக இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் எதிர்பார்ப்பாக காணப்பட்ட உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது.     

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version