ஓய்வை அறிவித்த கோலி-ரோஹித் ஜோடி

20-20 உலகக்கிண்ண தொடரை வெற்றி பெற்ற நிலையில் இந்தியா அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் உலகின் தற்போதைய சிறந்த துடுப்பாட்ட வீரரான விராத் கோலி ஆகியோர் 20-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னரே இந்த உலகக்கிண்ணம் நிறைவடைந்ததும் இவர்கள் இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்த தொடரில் 36 வயதான விராத் கோலி பெரியளவில் சோபிக்காத நிலையில் இறுதிப் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் நாயகன் விருதை வென்று அதனை பெற்று தன் அறிவிப்பை வெளியிட்டார். 125 போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி 4188 ஓட்டங்களை 48.69 என்ற உயரிய சராசரியில் பெற்றுள்ளார். ஒரு சதம் மற்றும் 38 அரைச்சதங்களை அவர் பெற்றுள்ளார்.

அணி தலைவர் ரோஹித் ஷர்மா கிண்ணத்தை வெற்றி பெற்றதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். 37 வயதான ரோஹித் ஷர்மா 2007 ஆம் ஆண்டு இந்தியா வெற்றி பெற்ற முதல் 20-20 உலகக்கிண்ண தொடரிலும் விளையாடியிருந்தார். 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 4231 ஓட்டங்களை 32.05 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 5 சதங்களையும் 32 அரைச்சதங்களையும் ரோஹித் பெற்றுள்ளார்.

சம கால கிரிக்கெட்டின் இரு தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக போற்றப்படுகின்றவர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகிய இருவருமே. இவர்கள் இருவரும் 20-20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இழப்பே. இனி இருவரும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடவுள்ளனர். அவர்களது வயது மற்றும் எதிர்கால அணியை உருவாக்கும் திட்டத்தில் ஒரு படியாக இது இடம்பெற்றுள்ளது. சாதித்து இவர்கள் இருவரும் விடைபெற்றுள்ளனர். இருவரும் தங்கள் கணக்குகளில் இரண்டு உலகக்கிண்ணங்களை தம் வசப்படுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version