‘முஸ்லிம் குரல்கள் எப்போது எழும்’ – சுமந்திரன் MP

தமிழ் மக்களின் உரிமைக்காக முஸ்லிம் மக்களின் குரல்கள் எப்போது எழும் என காத்துக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று (25/11) முஸ்லிம் வளவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ‘நாம் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்பதற்காக எங்களை பாராட்டுகிறீர்கள். அது மன நிறைவை தருகிறது. ஆனாலும் தமிழ் மக்களுடைய உரிமைக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது, 2ஆம் நாள் காத்தான்குடியில் பாரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது எங்களுடன் வருகை தந்த மக்களை எமது அரசியல் பயணத்திலும் நீண்ட தூரம் வரவேண்டும் எனவும் அப்போது தான் நமது இரு சமூகங்களும் நாட்டில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்றும் கூறினேன்.

எங்களுக்கு வெவ்வேறு அடையாளங்கள் இருந்தாலும் நாம் மொழியில் ஒன்றுப்பட்டவர்கள் என்பதால் இரு சமூகங்களும் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் அங்கே எந்தவிதமான முடிவும் கிடைக்காது.

அத்துடன் சரியானது எதுவோ, நீதியானது எதுவோ, மக்களுக்கு நன்மையானது எது என நாங்கள் நினைக்கிறோமோ, அதை செய்வதில் நாம் ஒருபோதும் நாம் பின்நிற்க மாட்டடோம். அத்துடன் சிங்கள மக்களுக்கும் தீமையான எதையும் நாம் ஒருபோதும் செய்யமாட்டோம்.

அதேபோல இலங்கை என்ற ஒரு அடையாளத்திற்குள் , அதிலிருக்கும் தனிப்பட்ட அடையாளங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்” என சுமந்திரன் எம்.பி தனது உரையின் ஊடாக வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version