அண்ணாமலை – தமிழ் அரசியல் தலைமைகளிடையே சந்திப்பு 

ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த அமரர் இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியைகளின் போது கலந்து கொண்ட இந்திய, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் பற்றியும், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழகத்துக்குமான உறவினை பலப்படுத்தும் வகையில் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நிலத் தொடர்பு ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அதன் மூலம் கூடுதலாக பயனடைய போவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எனவும், இந்தியாவின் முதலீடுகள் வடக்கு கிழக்கிலே செய்யும் பொழுது இங்கு வட கிழக்குக்கும் இந்தியாவுக்குமான அரசியல் இஸ்திரத்தன்மையினை பேண முடியும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழராக இருக்கும் காரணத்தினால் இங்கு கொண்டு வருவதுடன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவானதாக காணப்படும் இருப்பினும், இனி வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்த்தினை போன்ற ஆளுநர் நியமிக்கப்படின்  நிலத் தொடர்பு ஏற்படுத்த பட்டிருப்பினும் கூட இவ்வாறான முதலீடுகள் எமது மாவட்டங்களுக்கு வருவதற்குரிய வாய்ப்புக்களில் சில தடங்கல்கள்  சிக்கல்கள் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மாகாண சபை முறைகளுடாக மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதிலும் தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கட்சியினுடைய தலைமையின் கீழ் மாகாணங்கள் இயங்குமாக இருந்தால் கூடுதலாக முதலீடுகள் உள்வாங்கி தற்போது மத்திய அரசுடன் செயல்படுவதை விட எமது மாவட்டங்களுக்கான செயல் திட்டங்களை மாகாண மட்டத்தில் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவற்றினை செய்வதற்கு இந்தியாவின் கரிசனை எம் மக்கள் மீது வேண்டும் என்பதை பற்றியும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள்  நடைபெறும் காலகட்டம் என்பதனால் இந்தியா இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் இந்திய, பாரதிய ஜனதாவினது ஆதரவு மக்களுக்கு தேவை என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version