குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தொழிற்சங்க போராட்டங்கள் -ஆனந்தகுமார்

சில தொழிற்சங்கங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களில்
ஈடுபட்டு நாட்டில் அராஜக நிலையை தோற்றுவிப்பதற்கு முற்படுவதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை
எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட
அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இத்தகைய தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்
என கூறிய அவர் நாட்டின் தற்போதைய நிலைமையை உணர்ந்து, நாட்டை மீட்டெடுக்கும் பயணத்துக்கு
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
2025 வரவு – செலவுத் திட்டத்தில் நிச்சயம் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டு மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுவரும்வேளையில் தொழிற்சங்க போராட்டம் என்ற போர்வையில் மக்களை
பணயக் கைதிகளாக சில தொழிற்சங்கங்கள் பயன்படுத்திவருகின்றன.
இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. இத்தகைய தொழிற்சங்கங்கள் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யவே முற்படுகின்றன.

சில தொழிற்சங்கங்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமெனில் வற்வரியையே அதிகரிக்க நேரிடும்.
தற்போதுள்ள 18 வீத வரியே அதிகம். அதனை 21 வீதமாக்கினால் என்ன நடக்கும்? எனவே,
மக்கள்மீது சுமைகளை திணிக்கும் வகையிலான முடிவுகளை எடுப்பதற்கு எமது ஜனாதிபதி தயாரில்லை.

அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே,
2025 பாதீட்டில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் என அரசாங்க தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் நலன்கருதி தொழிற்சங்கங்களும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
மாறாக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முற்பட்டால் சுற்றுலா,
வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களிலும் அது தாக்கத்தை செலுத்தக்கூடும்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை
பெற்றுக்கொடுப்பதற்கு தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்து.
குறிப்பாக சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான
ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.எனவே, மலையக மறுமலர்ச்சியில் ஜனாதிபதி அதிக அக்கறை கொண்டுள்ளார்.

அதேபோல வடக்கு, கிழக்கு அபிவிருத்தி சம்பந்தமாகவும் கூடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே, இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை
ஆதரிப்பதே சிறந்த தேர்வாக அமையும்.” – என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version