பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை குறித்த வைத்திய சாலையின் நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன், அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 05 சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது.

“தொலைபேசியில் அச்சுறுத்தியமை”, “பேசித் தொந்தரவு செய்தமை” என வைத்தியர்களால் தனித்தனியாக ஐந்து வழக்குகள், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த வழக்குகள் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் அ. யூட்சன் முன்னிலையில் இன்று(16.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன் போது வழக்குத் தொடுநர்கள் சார்பாக ந.குருபரன், திருக்குமரன் உள்ளிட்ட நான்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

எதிராளி சார்பாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

வைத்தியர் அர்ச்சுனாவே தன் பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான்,

வைத்தியர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு உத்தரவிட்டதோடு ஒவ்வொரு வழக்கிலிருந்தும் தலா 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவித்தார்.

வைத்தியர் அர்ச்சுனா ஆதாரங்களுடன் வாக்குமூலம் வழங்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரலாம் எனவும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தாங்குவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை இம்மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version