நுவரெலியா அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த பணிப்புரை

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று(16.07)  நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் நுவரெலியா பீட்று தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டத்திற்கு, இடங்கள் முறையாக  ஓதுக்கீடு மேற்கொண்டபோதும் நுவரெலியா மாவட்ட நகர அபிவிருத்தி அதிகாரிகளினால் இத்திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இன்றைய தினம் அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எடுக்கப்பட்டது.

மேலும் ஹட்டன், டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்ம கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டு வந்த பிரச்சினை தொடர்பாக அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதனை தொடர்ந்து  ஹட்டன், டிக்கோயா நகர சபையினால்  சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டகலை பிரதேச சபை கழிவு அகற்றும் பகுதியில் அகற்றுமாறு கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் ஹட்டன் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு ஹட்டன் டிக்கோயா,நகரசபை செயலாளருக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முன்னெடுக்கபட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கின்ற புதிய அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மத்திய மாகாண ஆளுநர் திரு. லலித் யூ கமகே, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி  ராமேஸ்வரன், S.P.திசாநாயக்க, நிமால் பியதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version