LPL: கொழும்பு அணியின் பந்துவீச்சை சமாளிக்குமா கண்டி?  

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2வது Qualifier போட்டிக்குள் நுழைவதற்கு கண்டி பல்கோன்ஸ் அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகளுக்கு இடையிலான Eliminator போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. தரவரிசையில் முறையே 3ம் மற்றும் 4ம் இடங்களிலுள்ள கொழும்பு மற்றும் கண்டி அணிகள் Eliminator போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. 

கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொழும்பு அணியின் முஹமட் வசீம் 10(9) ஓட்டங்களுக்கும்,  க்ளன் பிலிப்ஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமலும், நிபுன் தனஞ்சய 14(11) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 

ஆரம்பம் முதல் நிதானமாக துடுப்பெடுத்தாடிய  ரஹ்மானுள்ளா குர்பாஸ் 30(29) ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். க்ளன் பிலிப்ஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, களத்தில் நின்ற சதீர சமரவிக்ரம, டுனித் வெல்லாலஹே ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். 

சதீர சமரவிக்ரம 62(45) ஓட்டங்களுக்கும், டுனித் வெல்லாலஹே 28(21) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, பின்னர் களத்திற்கு வந்த ஏனைய வீரர்களும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் வெளியேறினர். கொழும்பு அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கண்டி அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் ஹஸ்னைன் 3 விக்கெட்டுக்களையும், அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, கண்டி அணி 2வது Qualifier போட்டிக்கு தகுதி பெறுவதற்கு 160 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் அணியை 2வது Qualifier போட்டியில் எதிர்கொள்ளும். 

சற்றுமுன்னர் நிறைவடைந்த 1வது Qualifier போட்டியில் வெற்றியீட்டிய காலி அணி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version