ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் போது தேர்தல் நடைபெறும் திகதியுடன், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால எல்லையும் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த 17ம் திகதியிலிருந்து தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் காணப்படுகின்ற போதும், பொருத்தமான திகதியை தெரிவு செய்வதற்கு ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் தேவை என ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 17ம் திகதியிலிருந்து தேர்தலை நடத்தும் அதிகாரம் காணப்படுகின்ற போதும், செப்டெம்பர் 17ம் திகதி பௌர்ணமி விடுமுறை தினமாக காணப்படுவதினால் தேர்தலை குறித்த தினத்தில் நடத்த இயலாது எனவும், அதற்கு மறுநாள் 18ம் திகதியும் மதஸ்தலங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க இயலாது என்பதால் குறித்த திகதியிலும் நடத்த இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான திகதியை தெரிவு செய்யும் போது வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான பணியாளர்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை தாமதப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.