கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிக்காவுக்கு பிணை 

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22.07) உத்தரவிட்டது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு கொழும்பு, தெமட்டகொடையில் அமில பிரியங்கர என்பவர் கடத்தப்பட்டமை தொடர்பில், கடத்தலுக்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தல், அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் உட்பட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த மாதம் 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த தீர்ப்பினை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மனு இன்று(22.07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டாரவும் ஆஜராகியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version