மன்னாரில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேசாலை பகுதியில் இன்று(25.07) வியாழக்கிழமை காற்றாலை அமைப்பதற்காகப் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு வருகைத் தந்த அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். 

மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும், கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பேசாலை பகுதியில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பேசாலை தென்பகுதியில் அமைந்துள்ள புனித வெற்றி நாயகி ஆலயத்துக்கும், பொதுமக்களுக்கும் சொந்தமான காணிகளை மின் காற்றாலை அமைக்கும் நோக்குடன் அளவீடு செய்வதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வரவிருப்பதாக தகவல் அறிந்ததும்,  பேசாலையில் கடைகள் யாவும் மூடப்பட்டு, பொதுமக்கள் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒன்று கூடினர். 

நில அளவை செய்ய வந்தவர்கள்,  மக்கள் எதிர்ப்பின் காரணமாக அளவை பணிகளை மேற்கொள்ளாது திரும்பிச் சென்றனர்.  

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply