கோலாகல ஒலிம்பிக் தொடக்க விழா இன்று 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று(26.07) அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. 

கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1900 மற்றும் 1924ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றிருந்தன. லண்டன் நகரத்​திற்குப் பிறகு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெருமையை பாரிஸ் பெற்றுள்ளது. 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்வுள்ளனர். 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய பாரிஸ் நகரத்துடன், பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று(26.07) இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தொடக்க விழாவை ஒரு மைதானத்தில் நடத்தாமல், பாரிஸின் புகழ்பெற்ற சீன் நதிக் கரையில் நடத்தப்படுகின்றது. 

இந்த தொடக்க விழாவிற்கு முன்பாகவே ரக்பி மற்றும் கால்பந்து போன்ற சில விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் முதல் பதக்கம் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், ஏர் ரைபிள் கலப்பு அணி (Mixed team air rifle) விளையாட்டிற்காக வழங்கப்படும். இந்தப் போட்டியின் முடிவு நாளை(27.07) இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் பதக்கம் மகளிர் கூடைப்பந்தாட்டத்திற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளில் வழங்கப்படவுள்ளது. 

இம்முறை தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கத்துடன் 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

யுக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமையால், ரஷ்யாவும் அதனை ஆதரிக்கும் பெலாரஸ் நாட்டின் வீரர்களும், குறித்த நாட்டுக் கொடிகளுடன் ஒலிம்பிக் தொடக்க விழாவிலும், போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடுநிலைக் கொடியின் கீழ், தங்களது நாட்டைப் பிரிதிநிதித்துவப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒலிம்பிக் போட்டியில் யுக்ரேனை பிரதிநிதித்துவப்படுத்தும் 140 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தவுடன், அதே நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறும். இம்முறை பாரா ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி முதல் செப்டம்பர் 8ம் திகதி வரை பாரிஸில் இடம்பெறவுள்ளது. 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரேன் நெட்டசிங்க ஆடவருக்கான பூப்பந்தாட்ட போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார்.   

ஆசிய சாதனையாளர் தருஷி கருணாரத்ன, மகளிருக்ககான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதிப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவும், மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தில்ஹானி லேகம்கேவும் பங்கேற்கவுள்ளார்.   

நீச்சல் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவில் கைல் அபேசிங்கவும், மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவில் கங்கா செனவிரத்னவும் பங்கேற்கவுள்ளனர்.       

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version