சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (27/11) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது, “கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடைபெறுகின்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகளின் அக்கறையீனம் காரணமாகவே இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வாள் வெட்டுப் போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வகையில் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்துவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

எமது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை களைவதற்கு எமது படையினரையும் எமது இராணுவத்தினரையும் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறும் கிடையாது.

எனவே வீதி விபத்துக்களையும் சமூக விரோதச் செயற்பாடுகளையும் களைவதற்கு நாளை (29/11) தொடக்கம் சிறப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதுதொடர்பான மேலதிக அனுமதிகள் எவையும் கொழும்பில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version