இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும் குசல் மென்டிஸ் 4வது ஓவரில் 10(11) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களத்திற்கு வந்த குஷல் ஜனித் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
பத்தும் நிஸ்ஸங்க 32(24) ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த கமிந்து மென்டிஸ் நிதானமாக துடுப்பெடுத்தாடி 26(23) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குஷல் ஜனித் பெரேரா அரை சதம் கடந்தார். போட்டியின் 16 ஓவரில் ஹார்டிக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் குஷல் ஜனித் பெரேரா 53(34) ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் 17வது ஓவரிலிருந்து இலங்கை அணி சரிய ஆரம்பித்தது. 17வது ஓவரில் ரவி பிஷ்னோய் தொடர்ந்து 2 பந்துகளில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்த, தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க இருவரும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர். தொடர்ந்தும் அணியின் தலைவர் சரித் அசலங்க ஓட்டங்களை பெற முயற்சித்த போதும் அவரும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்தியா அணி சார்பில் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஹார்டிக் பாண்ட்யா 2 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி 02 விக்ட்களை கைப்பற்றினார். ஆரஷீப் சிங் 3 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். அக்ஷர் பட்டேல் 4 ஓவர்களில் 30 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதற்கமைய இந்திய அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று(27.07) நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றியீட்டியுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட தொடரை சமநிலைப்படுத்துவதற்கு இலங்கை அணி இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும்.
மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பமாகியது.
நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்குமான போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றிருந்தது.
அணி விபரம்
இந்தியா அணி சார்பாக கழுத்து உபாதை காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுசங்க நீக்கப்பட்டு, ரமேஷ் மென்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா
சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ், ரிங்கு சிங், ரியான் பராக்
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குஷல் ஜனித் பெரேரா, சரித் அஸலங்க தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ, ரமேஷ் மென்டிஸ், கமிந்து மென்டிஸ்