உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக மாறிய கொழும்பு துறைமுகம்

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார்.

இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29.07) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான Alphaliner, உலகின் வேகமாக வளரும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை முதல் காலாண்டில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம்,50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாக அமையவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது . கொழும்பு துறைமுகம் 2024 ஆம் ஆண்டில் 23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான Alphaliner, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் சிறந்த வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை அறிவித்துள்ளது.

பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த முன்னேற்றத்தை அடைந்தோம். ஆனால் அவை எமது பணிக்கு இடையூறாக அமையவில்லை. 2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 100 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

நான்கு முனையங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு பங்களித்துள்ளன என்று கூற வேண்டும். இந்த டெர்மினல்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, ECT மற்றும் மேற்கு முனையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மேற்கு முனையத்தின் செயல்பாடு பெப்ரவரி 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு முனையம் மற்றும் வடக்கு துறைமுகத்தின் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன், திருகோணமலை, காலி, காங்கேசந்துறை ஆகிய துறைமுகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவிலிருந்து பயணிகள் படகு சேவையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறை துறைமுகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட முனையம் படகுச் சேவை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

2023 உடன் ஒப்பிடும்போது விமான சேவைகளும் 25% முன்னேற்றமடைந்துள்ளன. இங்கு, பயணிகள் மற்றும் சரக்கு செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் விமானங்களின் வருகை 2023 இல் 36 இல் இருந்து ஜூலை 2024 க்குள் 46 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version