ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்குவதே மக்களின் தீர்மானம் 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்கும் முடிவை நாட்டு மக்கள் எடுத்துவிட்டனர் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

கட்சி பற்றியோ அல்லது அரசியல் நலன்கள் குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல எனவும், நாடு மற்றும் மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமே இதுவெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்துள்ள முடிவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுப்பையா ஆனந்தகுமார்  இவ்வாறு தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

“நாடு பற்றி எரியும் வேளையிலேயே சவால்களுக்கு மத்தியில் நாட்டை எமது ஜனாதிபதி பொறுப்பேற்றார். ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை ஆதரவை வழங்கியது. அதனை நாம் வரவேற்கின்றோம்.

தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை கட்சி என்ற வகையில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது. எனினும், இது இணைந்து பயணிக்க வேண்டிய தருணம். அதனால்தான் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

எனவே, கட்சியின் எதிர்காலம் பற்றி அல்லாமல் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுத்திருந்தால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவையே அக்கட்சியினர் எடுத்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கட்சிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய ஆளுமையும், அனுபவமும் தற்போதைய ஜனாதிபதிக்கே இருகின்றது. எனவே, புதிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து பரீட்சியம் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல. கட்சிகளும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

சுயநல அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில் உண்மையைக் கூறி பொதுநல அரசியல் நடத்தும் ரணிலின் கொள்கையே நாட்டுக்கு தேவை.” என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply