கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய, கடவத்தை – புறக்கோட்டை, வெலிவேரிய – புறக்கோட்டை மற்றும் கிரில்லவல – புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.
பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்துகள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிபத்கொடை – புறக்கோட்டை மார்க்கத்தில் புதிய பேருந்துகள் பலவற்றிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தமது வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை – புறக்கோட்டை பேருந்து தரிப்பிடம் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் பேருந்து உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.