பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் ஜப்பானை பின் தள்ளி சீனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சீனா 8 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 16 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது.
பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பானும், மூன்றாம் இடத்தில் 6 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் போட்டிகளை நடாத்தும் பிரான்சும் உள்ளது.
2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 37ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இதனுடாக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை எனம் வரலாற்று சாதனையை மனு பாகர் தன்வசப் படுத்திக் கொண்டார்.
இதேவேளை, இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் குத்துச்சண்டையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், பூப்பந்தாட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியுள்ளார்.
இருமுறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து மகளிர் பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
