நிமல் சிறிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி ரணிலுக்கு ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று(31.07) மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆதரவைத் உறுதிப்படுத்தியுள்ளது. 

இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான பொதுச்செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ரணில் விக்ரமசிங்கவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதாக வெளியாகிய அறிக்கையை நிராகரித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுக்கட்டாயமாக கைப்பற்றி வைத்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால, ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளதாக ‘X’ தளத்தில் தயாசிறி ஜயசேகர வெளியிட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட நபர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை எனவும் கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில் கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளை தான் கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version