வங்குரோத்திலிருந்து மீள்வதற்கு நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் – சஜித்  

அண்மைய தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து, நாட்டில் மாற்றங்கள் நடந்து, உடன்பாட்டில் திருத்தங்களை செய்து, அதன் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்தோம். இந்த செயன்முறையில் தியாகங்களைச் செய்யும் போது, ​​அனைவரும் அந்த தியாகத்தைச் செய்ய வேண்டும். முதல் தியாகத்தை அரச தலைவரே செய்ய வேண்டும்.  அவர் நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் அதன் மறுபக்கமே நடந்ததுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில், பெரும் செல்வந்தர்களையும், கோடீஸ்வரர்களையும் காப்பாற்றிவிட்டு, இந்நாட்டில் உழைக்கும் மக்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், பெரும் செல்வந்தர்கள் பணக்காரர்கள் என சகலரும் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் “விழுமியம் மிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின்” குருநாகல் மாவட்ட மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(02.08) குருநாகல் நகரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள பல விவகாரைகளில் இருந்து பெருமளவான பிக்குகள் வருகை தந்திருந்தனர்.

பல்வேறு பிரச்சினைகளால் இன்று பல விகாரைகள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த கிராமங்களிலும் நகரங்களிலும் அமைந்து காணப்படும் மதவழிபாட்டுத் தளங்கள் அந்தந்த கிராமங்களினதும் நகரங்களினதும் சுபிட்சத்தின் மையங்களாகும். விகாரை கட்டமைப்புகளை பாதுகாத்து போஷித்து,   மேம்படுத்துவதற்கு கெபகரு மாபிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன். இதன் மூலம் விகாரைகள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தளங்களை அபிவிருத்தி செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பால் பல விகாரைகள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இவ்விகாரை உட்பட பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி திட்டத்தை முன்னெடுப்போம். பாடசாலைகளில் ஸ்மார்ட் கல்வி போன்று விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களிலும் இந்த ஸ்மார்ட் திட்டங்களை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் பிரபஞ்சம் திட்டத்தை தடை செய்து விட்டு, அரசாங்கமானது அரச பணத்தை செலவழித்து அபிவிருத்தி திட்டங்களுக்கு பெயர் சூட்டி வருகிறது.

தற்போது, ​​உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு தடை விதித்துக் கொண்டு, அரச நிதியை பயன்படுத்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த முட்டாள்தனமான கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதும் கூட எமது நாட்டில் பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்து வருகின்றனர். அவர்கள் மதத்தை கடைப்பிடிப்பதில்லை. எந்த மதத்தை கடைப்பிடிக்கவோ அல்லது பின்பற்றவோ யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் மதத்தை கடைபிடிக்காதவர்கள் ஏனைய மதத்தவர்களை தாக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இது மதத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாடு இன்று ஒரு பயங்கரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் சுமார் 100 பில்லியன் டொலர்கள் காணப்படுகின்றன. தனிநபர் கடன் கிட்டத்தட்ட 12 இலட்சம் ஆகும். இந்த நிலையில் இருந்து 2048 இல் மீள முடியும், இதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். எமது நாட்டின் கடனை 2032 ஆம் ஆண்டு முதல் செலுத்த முடியும் என கூறப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதாக உறுதியளித்துள்ளது. நாடாகக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய கொள்கைகளில் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version