ஒலிம்பிக்கில் இன்று(07.08) நடைபெறவிருந்த மகளிருக்கான மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிடவிருந்த வினேஷ் போகத், நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் அதிகமாக காணப்பட்டமையினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பதக்க கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வினேஷ் போகத், மல்யுத்த போட்டியின் ஆரம்ப சுற்றிலேயே தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வருமான ஜப்பானின் யு சுசாகியை வீழ்த்தி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியிருந்தார்.
நேற்று(06.08) நடைபெற்ற மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதி போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், இந்தியாவுக்குத் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இறுதிப்போட்டி இன்று(07.08) நடைபெறவிருந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது வினேஷ் போகத்தின் எடை 50 கிலோ மற்றும் 100 கிராமாகக் காணப்பட்டுள்ளது. நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்தமையால் அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று(06.08) அரையிறுதிப் போட்டி நிறைவடைந்த பின்னர் வினேஷ் போகத் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்று அதிகமாக இருந்ததால் எடையைக் குறைப்பதற்கு இரவு முழுவதும் தூங்காமல் மிகவும் கடுமையான பயிற்சிகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாட்டினால் வினேஷ் போகத் தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடலுக்கு பாரிய தாக்கங்கள் எதுவும் இல்லை எனவும் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரவு முழுவதும் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் தற்பொழுது வெளியிடப்படாது எனவும், அவரின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வருத்தங்களை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
“வினேஷ் நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமிதம். ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேக அடையாளம். இன்றைய பின்னடைவு வருத்தமளிக்கின்றது. அதை வார்த்தைகளால் விபரிக்க இயலாது. நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது. வலிமையுடன் மீண்டு வாருங்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்காகப் பல போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள 29 வயதான வினேஷ் போகத் கடந்த வருடம், இந்தியாவின் ஏனைய முக்கிய மல்யுத்த வீரர்களுடன் இணைந்து பாரிய போராட்டங்களில் ஈடுப்பட்டிருந்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பிரதமர் மோடியினுடைய பாஜக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தே குறித்த போராட்டம் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, போராட்டக்களத்திலிருந்து தன் சொந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளால் அடித்து, பாதையில் இழுத்துச் செல்லப்பட்ட வினேஷ் போகத், அன்று மௌனமாக இருந்த அனைவரையும் இன்று தன்னுடைய திறமையினால் பேச வைத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் வினேஷ் போகத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்ட இந்திய அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் அவர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இத்தகைய பின்னணியில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரும் வினேஷ் போகத்திற்கு இறுதிப் போட்டியில் பங்கேற்ற இயலாமல் போனது இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டமையினால், 50 கிலோ எடைப்பிரிவு மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய அமெரிக்க வீராங்கனைக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படும். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்பதுடன், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படும்.