
ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் முதல் சுற்றில் பங்கேற்ற இலங்கையின் தில்ஹானி லேகம்கே 16வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்று இன்று(07.08) பிற்பகல் நடைபெற்றிருந்தது. இதில் தில்ஹானி லேகம்கே 53.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 16வது இடத்தை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக அவர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தில்ஹானி லேகம்கே உட்பட 6 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். அவர்களுள் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்று நேற்று(06.07) இரவு நடைபெற்றிருந்தது. அதில் பங்கேற்றிருந்த அருண தர்ஷன 44:75 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து 5வது இடத்தை கைப்பற்றினார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும்.
இருப்பினும், ஓட்டம் நிறைவடைந்து சில நிமிடங்களின் பின்னர் அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓடுபாதை விதி மீறல் காரணமாகவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அருண தர்ஷன, கடந்த 4ம் திகதி நடைபெற்ற ஆரம்ப சுற்றில்(Heat 5) மூன்றாம் இடத்தை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில், அருண அரையிறுதி போட்டியிலும் தன்னுடைய சிறந்த நேரத்தைப் பதிவு செய்வதற்கு முயற்சித்த போதும், ஓடுபாதை விதி மீறல் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தருஷி கருணரத்ன, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியில் 8ம் இடத்தையும், அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கான Repechage சுற்றில் 7ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
கைல் அபேசிங்க ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவின் ஆரம்பக்கட்ட போட்டியில்(Heat 4) இறுதி இடத்தை பெற்று வெளியேறியதுடன், கங்கா செனவிரத்ன மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவின் முதல் சுற்றுப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்ற போதும், போட்டியை நிறைவு செய்வதற்கு அதிக நேரம் எடுத்தக்கொண்டதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்க பங்கேற்ற முதல் சுற்றில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதன்படி, 2024ம் ஆண்டிற்கான பாரிஸ், ஒலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற அனைத்து போட்டிகளும் நிறைவடைந்தன.