ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு முதலாவது தங்கம் 

ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு முதலாவது தங்கம் 

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் சாதனையை புதுப்பித்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார் இதனுடாக ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான பாகிஸ்தானின் 40 வருட காத்திருப்பு நிறைவுக்கு வந்தது. நேற்று(08.08) இரவு நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதி போட்டியின் 2வது சந்தர்ப்பத்தின் போது 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கத்தை பெற்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, நடப்பு சம்பியனான நீரஜ் சோப்ரா இம்முறை வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டியில் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அவர் ஒலிம்பிக்கில் பதிவு செய்த சிறந்த தூரம் இதுவாகும்.  

88.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த கிரனேடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.  

பாகிஸ்தானின் சிறிய கிராமத்திலிருந்து, முறையான பயிற்சிகளின்றி, நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கம் வென்ற 27 வயதான அர்ஷத் நதீமுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதேவேளை, 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்று உலகின் அதிவேக மனிதனாக மகுடம் சூடிய அமெரிக்க தடகள வீரரான நோவா லைல்ஸ்(Noah Lyles) பின்தள்ளி, 200 மீட்டர் ஓட்டத்தின் தங்கப்பதக்கத்தை போட்சுவானா நாட்டை சேர்ந்த லெட்சைல் டெபோகோ(Letsile Tebogo) கைப்பற்றிக் கொண்டார். 

நேற்று(08.08) இரவு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியை 19:46 வினாடிகளில் நிறைவு செய்த லெட்சைல் டெபோகோ தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஒருவர் ஒலிம்பிக் வரலாற்றில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் கென்னி பெட்னரெக்(Kenny Bednarek) பெற்றுக் கொண்டதுடன், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நோவா லைல்ஸ் மூன்றாம் இடத்தை கைப்பற்றினார். 

நோவா லைல்ஸ், கடந்த 6ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே 200 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இறுதிப் போட்டி நிறைவடைந்ததன் பின்னர் நோவா லைல்ஸ் சக்கர நாற்காலியின் உதவியுடன் விளையாட்டரங்கிலிருந்து வெளியேறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.  

கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 103 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது. 

சீனா 29 தங்கம், 25 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 18 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.   

போட்டிகளை நடத்தும் பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் நான்காம் இடத்திலுள்ளது. இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் 64ம் இடத்தில் காணப்படுகின்றது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version