
அவசர தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச தர நிர்ணயங்களை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் டிரான் அலஸ் இன்று(09.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியிடப்பட்டதன் பின்னர், சர்வதேச கடவுச்சீட்டு சுட்டெண்ணில் பின்தங்கியுள்ள இலங்கை முன்னோக்கி நகரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது சர்வதேச கடவுச்சீட்டு சுட்டெண்ணில் 193வது இடத்திலுள்ள இலங்கை, புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் சுட்டெண்ணில் 50 வது இடத்தை விட முன்னோக்கி செல்லும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டிலுள்ள இலத்திரனியல் முறைமையினுடாக, உரிமையாளர்களின் விபரங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் என்பதுடன், இதனுடாக உலகெங்கிலும் உள்ள எந்த விமான நிலையங்களிலும் கடவுச்சீட்டை எளிதாக பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டவர்களுள் 23 வீதமானவர்கள் மாத்திரமே அதனை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவசர தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கி நாளொன்றுக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.