மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள் மாத்தளை பொலிஸாரினால் இன்று(12.08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் ஆபாச புகைப்படமாக மாற்றம் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் கற்கும் தரம் 10ஜ சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளையிலுள்ள குறித்த பாடசாலையில் நடன ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியையின் புகைப்படம், ஆபாச புகைப்படமாக மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாத்தளை ஹுலங்கமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களை சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரு மாணவர்களும், மாத்தளை சிறுவர் நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.