LNG உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விநியோகத்திற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை 

LNG உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விநியோகத்திற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை 

இலங்கைக்கு LNGஐ விநியோகம் செய்தல் மற்றும் LNG உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்தியாவைச் சேர்ந்த பெட்ரோநெட் LNG லிமிட்டட் மற்றும் இலங்கையின் LTL ஹோல்டிங்ஸ் லிமிட்டட் இடையில் நேற்று(20.08) புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பல மாதிரி ISO கொள்கலன் விநியோக சங்கிலி ஊடாக LNG விநியோகம் குறித்த புதுமையான தீர்வு ஒன்றினை வழங்குவது குறித்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கவனம் செலுத்துகின்றது. கொழும்பில் உள்ள கெரவலப்பிட்டியவில் LNGஐ இறக்குதல், களஞ்சியப்படுத்தல், மீளுருவாக்கல் மற்றும் இலங்கையின் சோபதனாவி மின்னுற்பத்தி ஆலைக்கு தேவையான LNGஐ ISO கொள்கலன்கள் மூலமாக பெட்ரோநெட் LNG லிமிட்டட் கொச்சி முனையத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் இதில் உள்ளடங்குவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோரும் இலங்கை அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் பெட்ரோநெட் LNG லிமிட்டட் நிறுவனமானது 24 மணி நேர மின் உற்பத்தியை அதேபோல் சூழலுக்கு உகந்த, நம்பகமான மற்றும் ஸ்திரமான மின் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் கெரவலப்பட்டியவில் உள்ள 230 மெகாவாட் எரிவாயு ஆலைகளுக்கு தேவையான LNGஐ வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இந்த ஒன்றிணைவானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுச்சக்தி துறைசார்ந்த பங்குடமையில் புதிய அத்தியாயமொன்றைக் குறித்து நிற்பதுடன் இலங்கைக்கான வலுச்சக்தி பாதுகாப்பினை மேலும் வலுவாக்குவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையிலும் உள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய பொருளாதார வினையூக்கியாக ஸ்திரமானதும், சூழலுக்கு உகந்ததுமான மின்சக்தி விநியோகத்தை மேம்படுத்துவதாகவும் இது அமைகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version