‘தந்தைக்குப் பின் மகன்’ என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது – துமிந்த

'தந்தைக்குப் பின் மகன்' என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது - துமிந்த

அனைவரும் ஒன்றிணைந்தால் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளத்தையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டதாக இன்று(22.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க,

“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்ட போது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்ட போதும் அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றத்தினூடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்காமலிருந்திருந்தால், இன்று பங்களாதேஷுக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும்.

மக்கள் போராட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த, போராட்டக்காரர்களைப் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்து அவர்களுக்கு விரும்பிய சட்டத்தை நிறைவேற்றுங்கள் என சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து வெளியிட்டிருந்தார். இதன் போதே சிறந்த நோக்கத்துடன் தொடங்கிய போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக மக்களைத் தூண்டிவிடும் நிலைக்கு மாறியது.

இன்று பங்களாதேஷில் நடந்த விடயங்களை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி இந்த நாட்டிலும் செய்ய முயற்சித்தது. இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால், நாடு முற்றாக சீர்குலைந்திருக்கும்.  

மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்ற போது, ​​நாட்டைக் காப்பாற்றிய தலைவராக அவரை கருதினோம். ஆனால் அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அனைத்து காலத்திற்கும் நாட்டின் அரசர் என்று நினைத்தனர். இரண்டு வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்தி விட்டு, தற்பொழுது எனக்குப் பின் என்னுடைய மகன் என்று கூறுகின்றனர், இதனை ஏற்றுக்கொள்ள இயலாது” என அவர் தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version