நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்கட்சி முயற்சி – ரணில்

நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்கட்சி முயற்சி - ரணில்

மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (24.08) முற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி

“இந்த மேடையில் எனக்கு ரோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் ஆசிரியர் இருக்கிறார். 13 – 14 வயதில் அவரிடம் கல்வி கற்றேன். 1961 ஆம் ஆண்டுகளில் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரிடம் கற்றிருக்கிறோம். எனவே நாட்டை மீட்டெடுத்த பெருமையை அவருக்கும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்ரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர். எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தது நினைவிருக்கிறது. அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால் தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.

உங்களுக்காக போராடவும், உங்களுக்கு சலுகை வழங்கவும், அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவும், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நாட்டுக்குள் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தவும், நாட்டை சரியான பாதைக்கு கொண்டுச் செல்லவும் என்னால் தலைமைத்துவம் வழங்க முடிந்தது என்பதாலேயே ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்கிறோம்.

கஷ்டமான காலத்தில் இந்த பொறுப்புக்களை நான் ஏற்றுக்கொண்டேன். எதிர்க் கட்சித் தலைவருக்கு இந்த ஆசான் கிடைக்கவில்லை. அதனால் தான் சவால்களை ஏற்காமல் அவர் ஓடிவிட்டார். பெரிஸ் ஒலிம்பிக் வரையில் அவர் ஓடி முடித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மாற்றுப் பிரதமர் ஆவார். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரையும் சார்ந்துள்ளது.

ஆனால் மக்கள் கஷ்டப்படும் போது ஓடி மறைந்து கொண்டார். வரிசைகள் பற்றி யோசிக்கவில்லை, மக்கள் பசியை பற்றி சிந்திக்கவில்லை. அனுர குமாரவும் ஓடி மறைந்து கொண்டார். ஆனால் அன்று இங்கு இருக்கும் அமைச்சர்கள் இருந்தனர். நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினோம். கஷ்டமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. உள்நாட்டு கடன் பெறுதல் வரையறுக்கப்பட்டது. பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. செலவுகளைக் குறைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு வருமானம் தேட வெட் (VAT) வரியை அதிகரித்தோம்.

அவை இலகுவான பணியல்ல. அமைச்சரவையில் பல முறை பேசினோம். மக்கள் கஷ்டங்களை தாங்கிக்கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். 2022 ஆம் ஆண்டில் மொத்தத் தேசிய உற்பத்தி 13 டொலர் பில்லியன் சரிவைக் கண்டது. எவ்வாறாயினும் எமது முயற்சிகளால் 2023 இல் 8 பில்லியன் டொலர்களினால் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தோம். இதனால் ரூபாயின் பெறுமதி அதிகரித்தது. அஸ்வெசும நலன்புரித் தொகை வழங்கினோம். இவ்வருடத்தில் 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கவுள்ளோம். சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டது.

11 பில்லியன் ரூபா செலவில் இலவசமாக அரிசி வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு உதய செனவிரத்ன அறிக்கையின்படி 25 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை வழங்குவோம். அதனால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது. முதியோருக்கான நிலையான வைப்பு வட்டி வீதம் 10 ஆக அதிகரிக்கப்படும். மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்குகிறோம். 20 இலட்சம் பேர் இதனால் பயனடைவர். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டு உரிமைகளை மக்களுக்கு கொடுப்போம். பெருந்தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்படும். ‘உறுமய’ வேலைத் திட்டத்திற்கு தனியான ஒரு ஆணைக்குழு அமைக்கப்படும். அதனால் அடுத்த மூன்று வருடங்களில் அந்த வேலைத்திட்டம் முழுமைப்படுத்தப்படும்.

2 வருடங்களில் எந்த அரசாங்கமும் செய்ய முடியாததை செய்தோம். அதுவே முன்னேற்றம். 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் சிவப்புப் பருப்பு விலை 41 ரூபாவினால் குறைந்துள்ளது. கோதுமை மா 29 ரூபாவினால் குறைந்துள்ளது. கோழி இறைச்சி விலை 11 சதவீதத்தினால் குறைந்திருக்கிறது. டீசல் 28 வீதமாக குறைந்துள்ளது. கேஸ் 31 சதவீதமாக குறைந்துள்ளது. டீசல் 450 ரூபாவில் இருந்து 318 ரூபாவாகக் குறைந்திருக்கிறது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 இல் இருந்து 28 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமை குறைந்துள்ளது. அதனாலேயே சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்தேன்.

ஆனால் மேலும் பல சலுகைகள் தேவைப்படுகின்றன. அதற்காக ரூபாவை வலுப்படுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டில் அதனை செய்து அதிக சலுகைகளை வழங்குவோம். இன்னும் ஒரு வருடம் பாடுபட்டால் நல்ல பலன்களை அடையலாம். பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யலாம். மருந்து தட்டுப்பாட்டை குறைக்கலாம். பொருளாதாரம் மேம்படும். ஏற்றுமதித் துறை பலப்படும். சுற்றுலாத் துறை மேம்படும். வெருகல் – மட்டக்களப்பு வரையில் சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படும். சிறிய – பெரிய ஹோட்டல்கள் அமைக்கப்படும். கல்முனை – அருகம்பே வரையில் சுற்றுலாத்துறை பலப்படுத்தப்படும். இதனால் மக்களுக்கும் பல வாய்ப்புகள் உருவாகும்.

விவசாயம் நவீனமயப்படுத்தப்படும், மீன்பிடித்துறையும் நவீனமயப்படுத்தப்படும், வீடுகளின் வருமானம் அதிகரிக்கும், கல்குடாவை அபிவிருத்தி செய்வோம். அதனால் நாம் கடன் பெற்ற 18 தரப்பினருடன் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளோம். கடன் மீளச் செலுத்த காலம் வழங்கியுள்ளனர். 10 பில்லியன் டொலர் கடன் சலுகை கிடைத்துள்ளது.

சஜித் இந்த முறையை மாற்றப் போவதாக சொல்கிறார். இவற்றை மாற்றினால் சலுகைகள் நிறுத்தப்படும். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். 400 ரூபா வரையில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். கேஸ் இருக்காது. நாட்டை வழி நடத்தும் முறை சஜித்துக்கு தெரியாது. நாம் அதற்கான முயற்சிகளை செய்த போாதும் எமக்கு உதவ முன்வரவில்லை. உங்களுக்கு சலுகைகளை வழங்க முயற்சித்தோம். அதற்கிடையில் தேர்தல் நடத்தவில்லை என்று எனக்கெதிராக வழக்குத் தொடுத்தனர். தேர்தல் நடத்தியிருந்தால் அதற்கே 3 – 4 மாதங்களை செலவிட வேண்டியிருந்திருக்கும்.

2022 ஒவ்வொரு நொடியும் நாம் பாடுபட்டதாலேயே இன்றைய நிலை எட்டப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நாடும் இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்ததில்லை. அதனைத் தடுப்பதே எதிர்க் கட்சியின் தேவையாகும். எனக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். மக்களை வாழவைப்பது அடிப்படை உரிமை மீறல் என்று நான் நினைக்கவில்லை. மக்களுக்காக முன்வந்து கஷ்டப்பட நான் தயார். அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதே எனது தேவையாகும்.

எனவே தேர்தலில் அவர்களை துடைத்தெறியுங்கள். நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம் .நாட்டையும் முன்னேற்றுவோம். சிறந்ததொரு எதிர்காலத்தை நான் உருவாக்குவேன். 2019 ஆம் ஆண்டில் இருந்ததை விடவும் நல்ல நிலையை உருவாக்குவேன். எதிர்காலத்தைப் பாதுகாக்க முன்வாருங்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இன்றி அல்லல்பட நேரிடும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply