ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளரை கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளதென
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதியியல் நிபுணர்களின் தேசிய மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும்
அதனை நிர்வகிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளரை வரவழைக்க வேண்டும் என்றும் அனுர கூறினார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடிய போது டெலிகொம் உயர் தொழில்நுட்பத் துறையாக
இருப்பதால் அதனை நிர்வகிக்க போதுமான திறன் இல்லையென அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும்
திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திறமையான மனித வளங்கள் இன்மையால் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அனுரகுமார திசாநாயக்க கூறினார்.
நாட்டிற்கு புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டுவரும் நோக்கில் ஒவ்வொரு வருடமும்
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 200 மாணவர்களை அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு
தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.