வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய 03 முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று அல்லது நாளைக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(27.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கைள் முன்வைத்துள்ளார்களா? அல்லது பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்களா? என வி மீடியா பணிப்பாளர் விமல் கேள்வி எழுப்பிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும்
எதிர்வரும் 29 ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தினூடான பல விடயங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் தரப்புகள் எதிர்பார்க்கும் 13 ஆம் திருத்தச்சட்டம் அமுலுக்கு வருமெனவும் ஆயுதம் தாங்காத பொலிஸ் அதிகாரம் உட்பட்ட பல தீர்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசில் கிடைக்குமெனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதனோடு கல்வியும் மாகாண அரசுகளுக்கு கிடைக்குமெனவும், இதனடிப்படையில் 03 முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் ரணில் விக்ரமசிங்கவுடன் கைக்கோர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அது நிச்சயம் இன்றோ, நாளையோ நடக்கும் என்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி என்பது உயர் கல்வியில் மட்டுமல்ல அடிப்படை கல்வியிலும் தேவை. காலம் காலமாக கல்வி ஏதொரு நிலையில் மத்திய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது. மலையக தமிழ் பிள்ளைகள் உயர்தரத்தில் விஞ்ஞான கல்வியை கற்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். அதிக மக்கள்வாழும் நுவரெலியாவில் கூட பிள்ளைகள் விஞ்ஞான கல்வியை கற்க முடியாத நிலை காணப்படுகிறது. அது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் மாறும். 13 ஆம் திருத்தும் மூலம் மாகண அரசுகளுக்கு கல்விக்கான முழுமையான அதிகாரம் வழங்கப்படுமென சுரேன் ராகவன் கூறினார். அத்தோடு தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்ட தொலைநோக்குள்ள அரசாங்கம் ஒன்று உருவாகவேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.